Thursday, February 14, 2013

4.40. சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.40. சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எத்தனை பொருட்கள் சீரெனும் சொல்லுக்கு!
அத்தனை யாகிவரும் சீரெனும் உறுப்பு
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே! ... [கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்]
செய்யுள் என்பதோர் செடியெனக் கொண்டால்
செடியின் இலைகளே சீர்கள் ஆகுமே
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் ... [தொடை=எதுகை, மோனை போன்றவை]
கிளைகளே அடிகளாய் விளைந்து வந்திடக்
கிளைகளில் இணையும் காம்பே தளைகளாம்.

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.

சீரே செய்யுளின் செல்வம் அழகு
நன்மை பெருமை மதிப்பு புகழே
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேல்வந்த பாவின் பொற்காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே.

சீர்களே பெரும்பங்கு செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்குமே.

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபெயர்
ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.

4.41. சீரென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையிலே
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்குமே
தாளத்தின் நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாளத்தின் முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ(டு) ஒப்பிடுவார்.

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே.

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி காண்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளொன்று கேட்பின்
அகர முதல உளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

No comments:

Post a Comment