Wednesday, January 30, 2013

3.10. தூங்கல் முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.10. தூங்கல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வருகிற
வஞ்சித் தளைகள் பயில வேண்டும்
இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்.
மூவசை நிரையில் முடிவது கனிச்சீரே.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!

ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!

நேர்நிரைநிரை நேர்நேர்நிரை நேர்நிரைநிரை
நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நேர்நிரைநிரை

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

முயற்சி 2.
(வஞ்சித் துறை)
தாலாட்டுகள் பலபாடியும்
காலாட்டுமே தூங்காது!
எட்டிநோக்கிடும் சுட்டிப்பயல்
பட்டுவிழிகள் சினம்தணிக்கும்!

தா/லாட்/டுகள் பல/பா/டியும்
கா/லாட்/டுமே தூங்/கா/து!
எட்/டிநோக்/கிடும் சுட்/டிப்/பயல்
பட்/டுவிழி/கள் சினம்/தணிக்/கும்!

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை
நேர்நேர்நிரை நேர்நேர்நேர்
நேர்நிரைநிரை நேர்நேர்நிரை
நேர்நிரைநிரை நிரைநிரைநேர்

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

*****

Tuesday, January 29, 2013

3.9. தூங்கல் ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.9. தூங்கல் ஓசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.

அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்
மந்தம் ஓய்வு ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.
தூங்கலை விளக்கும் வஞ்சி யடிகள்:

(கலித்தாழிசை)
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்‍ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சி யடிகள் பொதுவில் அமைவது
இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்
தூங்க லோசை கேட்குமோர் பாடல்:

சான்று:
(குறளடி வஞ்சிப்பா)
மாகத்தினர் மாண்புவியினர் 
யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‌ஆகமப் 
பேரறிவினர் பெருநூலினர் 
காணத்தகு பல்கணத்தினர் 
---கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல் செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
எனினும் துள்ளல் தூங்கல் இரண்டும் 
செய்யுளில் மட்டுமே வருவன.
அகவல் செப்பல் அடியிடைத் தளைக்கும்
துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.

*****

Monday, January 28, 2013

3.8. துள்ளல் முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.8. துள்ளல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?
கலித்தளை பெரிதும் வருவது வேண்டும்.

(கலிவிருத்தம்)
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளையாய்க் குதித்துவரும்
கலிப்பாவில் கலித்தளையே பெரும்பாலும் பயின்றுவரும்
கலித்தளையே சீர்களிடை பெரிதும்வர வேண்டுவது
கலித்தளையே அடியிடையே கட்டாய மில்லை.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.

(ஆசிரியத் தாழிசை)
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரை
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நிரை

(குறள் வெண்செந்துறை)
மூவசைச் சீர்கள் நேரசையில் முடிந்து
நிரைதொடரக் கலித்தளை வருவது காண்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
பிடித்திழுத்(து) இடுப்பினிலே என்ற சீர்கள்
பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்
குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் 
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே

ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனக்காண்க
எனவேதான் கலித்தளையும் பிறதளையும் விரவிவரக்
கலிப்பாக்கள் பொதுவாக இயற்றப்படல் காணலாம்.

முயற்சி 2.
[அலகிட்டுக் கலித்தளையே பயில்வது காண்க.]
(குறள் வெண்செந்துறை)
படபடக்கும் சிறகுடனே பறந்துவரும் புறாக்கூட்டம்
சடசடெனத் தரையமர்ந்து பொரியுண்ணும் அழகுகாண்பீர்!

*****

3.7. துள்ளல் ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.7. துள்ளல் ஓசை

(இணைக்குறள் ஆசிரியப்பா)
துள்ளல் என்பது குதித்தல் ஆகும்
துள்ளலில் நடையே தடைப்படும்
பசுவின் கன்று துள்ளல் போல
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று 
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

(ஆசிரியத் தாழிசை)
ஓரடிக்குள் அறுதியிட்டோ அடியிடையே தொடர்ந்துவந்தோ
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில் 
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

சான்று 1:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத் 
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து 
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

’வகைக்கருணைக் கண்ணோக்கம்’ இருசீர்கள் தவிர்த்தெல்லாச்
சீர்களிடை அடிகளிடைக் கலித்தளையே பயின்றுவர
அடிகளிலே ஒலித்துள்ளல் அமையாது போமோகாண்!

சான்று 2
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
--சேக்கிழார், திருத்தொண்டர் புராணம் 140

வெண்டளையும் கலித்தளையும் சமமாகப் பயின்றாலும்
அணிமேலே அணிசேர்ந்தே அதிசயங்கள் அடுக்கிவரத்
துள்ளலோசை துவளாமல் ததும்புவது கண்டீரோ?

Tuesday, January 22, 2013

3.6. செப்பல் முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

3.6. செப்பல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலுமே.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.
தானே இயல்பாய் மொழிதல் மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

செப்பல் ஓசை பயிலும் வெண்பா
ஒன்று நான்கு அடிகளில் முயல்வோம்
வெண்பா விளக்கம் வேறோர் இயலிலே.

(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க 
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை 
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நேர்நிரை நேரநேர் மலர்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்களை வைத்து இன்னொரு வெண்பா.

இந்த அடிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

(வெண்பா)
நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!

3.5. செப்பல் ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

3.5. செப்பல் ஓசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.
"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையிலே.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய 
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையிலே.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் வராது அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
செப்பல் ஒலித்திடும் வெண்பா வடிவத்தில்
செப்புவர் சான்றோர்தம் நல்லுரை - இப்படி
நல்வழி மூதுரை போன்ற பனுவல்கள்
செல்வழி சொல்வன வாம்.

சான்று 1.
நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 11

சான்று 2.
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.
--மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

3.4. அகவல் முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.4. அகவல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அகவல் ஒலிவரப் புனைவது எளிது.
நாமும் அகவல் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே. 
[அகவற் றளைகள்: நேரொன்று, நிரையொன்று ஆசிரியத் தளைகள்]

இங்ஙனம் புனைதல் இயலா தென்பதால்
நேர்முன் நிரையும் நிரைமுன் நேர்வரும்
ஈரசை இயற்சீர் வெண்டளை விரவி
அகவல் ஓசை சற்றே மங்கினும்
அகவற் பாவில் ஒலிக்கப் புனைவரே.
[மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.]

அகவல் வெண்டளை விரவும் அடிகள்:
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இசைந்து வந்திட
அகவல் ஓசை வருவது தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:
வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!

அகவல் குறைந்து வினவல் ஆகிட
செப்பலும் துள்ளலும் சேர்ந்தே ஒலிக்க
அகவல் ஓசை மறைவது காண்பீர்.

முழுவதும் நேரசை வருகிற அகவல்:
பாலும் தேனும் இல்லை யென்றால்
நீரும் சோறும் போதும் அன்றோ?

முழுவதும் நிரையசை வருகிற அகவல்:
பலவகைப் பொருட்களில் மயங்கிடும் உலகினில்
நிலைபெற இருப்பது எதுவெனத் தெரியுமா?

கவிதையைச் செய்யுளாய்க் கிளைத்திடும் போது
கவினும் அழகும் அணியும் நோக்கி
மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
வனப்பு மிளிர எழுத முனைந்தால்
கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்
மத்தாப் பாக எரிந்து மறையாது!

எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.
தறியின் பாவு ஊடுதல் போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்தி வந்து
எழுதும் பாவகை எவ்வகை ஆயினும்
எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

3.3. அகவல் ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.2. செய்யுள் ஓசை

(நிலமண்டில ஆசிரியப்பா)
ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு
இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
ஒலியின் ஊடக மாக வருவதே.

இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை 
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே
அகவல், செப்பல், துள்ளல், தூங்கலென
தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு.

ஆசிரியத் தளையிரண்டால் ஆவது அகவல்
வெண்டளை யிரண்டு வருவது செப்பல்
கலித்தளை யொன்றே வருவது துள்ளல்
வஞ்சித் தளையிரண்டு வருவது தூங்கல்
ஒவ்வோர் ஓசைக்கும் தளைகள் இருப்பினும்
செப்பல் தவிர வேறு ஒலிகளில்
பிறவகைத் தளைகள் விரவி வருமே.

அகவல் ஓசை வருவது அகவற்பா
அகவற் பாவே ஆசிரி யப்பா
செப்பல் ஓசை வருவது வெண்பா
துள்ளல் ஓசை வருவது கலிப்பா
தூங்கள் ஓசை வருவது வஞ்சிப்பா
நால்வகை ஓசையில் உள்வகை உண்டே.

3.3. அகவல் ஓசை

(நிலமண்டில ஆசிரியப்பா)
மயில்கத் துவதை அகவல் என்கிறோம்
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்
உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
எடுத்தல் என்றும் அதனை அழைப்பரே.

செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை
தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்
நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறே.

ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்
இருவர் உரையா டலாக இன்றி.
ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்
அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!

தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பது அறியலாம்.

அகவல் ஓசை பயின்று வருவது
ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.
ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.
மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்று வந்தால் ஆசிரி யத்தளை.

’மாமுன்நேர்’ என்றால் மாச்சீரைத் தொடர்ந்துவரும்
சீரின் முதலசையில் நேரசை இருக்கும்.
’முன்’னென்றால் எதிர்நோக்கி என்றுபொருள் கொள்க.

(குறள் வெண்பா)
மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

(நிலமண்டில ஆசிரியப்பா)
இவ்விரு தளைகளும் சீர்களின் இடையிலும்
அடிகளின் இடையிலும் தொடர்ந்து வருவது
செய்யுளின் ஓசைக்கு இன்றியமை யாததாம்.

அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை‍இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய 
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
--அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.

இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
--மஹாகவி பாரதியார்

3. யாப்பு விவரணம்: ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3. யாப்பு விவரணம்: ஓசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிப்படை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
செயல்வகை உறுப்புகள் பின்னர் பார்ப்போம்.
பொருள்வகை உறுப்புகள் இறுதியில் வருமே.

அடிப்படை உறுப்புகள் ஏழில் வருமே:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாகவே. ... [பார்க்க 2.1.,2.6.]

செயல்வகை உறுப்புகள் ஏழில் வருமே:
யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும், 
வண்ணம், இயைபு, இழைபு என்றே. ... [பார்க்க 2.6.]

பொருள்வகை உறுப்புகள் பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்றே. ... [பார்க்க 2.3.,2.5.]

ஓசை:
மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.
தளைகள் பயின்றிட வருவது ஓசை.
தளையால் ஓசையும் ஓசையில் தளையும்
என்றிவ் விரண்டும் ஸயாமின் இரட்டையரே.

இயல்பான ஓசையில் வருவது இயற்பா
இசையோடு சேர்ந்து ஒலிப்பது இசைப்பா
இயற்பா இயல்வது இலக்கண விதிகளில்
இசைப்பா இயல்வது சந்த லயங்களில்
இலக்கண விதிகளில் இயலும் இயற்பாவின்
இயல்பான ஓசையைத் தளைகள் குறிப்பினும்
இயற்பா ஓசையில் எழுத்தும் சீரும்
இணைந்தே செய்யுளின் ஓசை எழுமே.

3.1. அசையும் சீரும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை விவரணம் நோக்கும் முன்னர்
அசைச்சீர் உறுப்புகள் அடிப்படை தெளிவோம்.
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்து
ஒன்றாய் ஒலிப்பது அசையெனப் படுமே.
அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்து
இசைந்து ஒலிப்பது சீரெனப் படுமே.

(குறள் வெண்செந்துறை)
குறிலோ நெடிலோ தனித்துவந் தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[பா/னு வந்/தாள்]

தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின் 
இறுதியில் வருமே:  ’பானு, படகு’.

ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகும்.

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[வழி/வகை அறிந்/திடாள்]

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை 
நிரையெனச் சேர்த்த பின்னரே, 
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின் 
நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகுமே.

அசைகள் இணைந்து வருகிற சீர்களில்
ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில் 
பெரிதும் பயின்று வருமென அறியலாம்.

ஈரசைச்சீர் இருவகை: மாச்சீர் விளச்சீர்.
நேரசை இறுதியில் வருவது மாச்சீர்
நிரையசை இறுதியில் வருவது விளச்சீர்.

மூவசைச்சீர் இருவகை: காய்ச்சீர் கனிச்சீர்.
நேரசை இறுதியில் வருவது காய்ச்சீர்.
நிரையசை இறுதியில் வருவது கனிச்சீர்.

அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய பகுதியில் அறியப் பெறலாம்.

2.4. யாப்பியல்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

2.4. யாப்பும் தூக்கும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;
தூக்கு என்பது ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
தூக்கு என்பது தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் ஏழு வகையிலே.
மரபு என்பது நிறுவிய வழக்கு;
தூக்கு என்பது மதிப்பினை ஆய்தலுமே.

செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து, 
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாக உள்ள உறுப்புகள்.
மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே.

2.5. யாப்பியல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபு, இழைபு என்று மொத்தம்
பத்தும் நான்கும் அமைவது யாப்பியலாம்.

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.
மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே.

2.6. மூவகை யாப்பு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
அடிப்படை உறுப்புகள் ஏழு ஆகும்:
மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்றே.

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே.

*** *** ***

2.2. வரிகள், பொருள் உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

2.2. வரிகள் அமைக்க

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுள் அமைக்க உறுப்புகள் ஏழெனில்
வரிகள் அமைக்கப் பத்தும் இரண்டும்:
வனப்பு, தொடையே, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, புலனே இழைபு
என்பன அந்தப் பத்தும் இரண்டுமே.

(குறள் வெண்செந்துறை)
வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு.

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டு என்பது.

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி.

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகு என்பது.

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு.

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும்.

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
குறிப்பால் பயின்று சொல்வது புலனாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபு என்பதாம்.

2.3. பொருள் உணர்த்த

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பத்தும் மூன்றும்:
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்று பத்தும் மூன்றுமே.

நோக்கு என்பது கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டாரை ஈர்த்து
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே.

திணையே ஆகும் அகமும் புறமும்;
அகமாம் மனதின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரமே.

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்று என்பது அவர்களின் பேச்சே.

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே.

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே.

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.
துறை என்பது மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறு படுதலாம்.

2. செய்யுள் உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

2. செய்யுள் உறுப்புகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கில்
நல்லதோர் கவிதை மரபில் முனைவோர்
எல்லோரும் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே.

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம்,  பயனும், மெய்ப்பாடு, 
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பத்து நான்கே.

2.1. செய்யுள் இயற்ற

(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் என்ப(து) யாதெனக் கேட்பின்
மெய்யில் தங்கும் உயிருடன் ஒப்பிட்டுச்
செய்யுள் இலக்கணம் நன்னூல் கூறுமே.

பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்.
--நன்னூல் 268

தோலும் இரத்தமும் தசையும் சதையும்
எலும்பும் மச்சையும் வீரியம் என்னும்
எழுவகைத் தாதுவால் இயன்றிடும் உடல்போல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களில் அமைந்து
அகம்புறம் பொருளினை அணிபெற விளக்கிக்
கல்வியில் வல்லோர் உணர்வினை உரைத்தலே
செய்யுள் என்னும் இலக்கிய வடிவமாம்.

எழுத்தால் ஆவது சொல்லென் பதனால்
எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும்
பழுதற நான்கும் நடப்பது யாப்பே.

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே.

பாவே செய்யுள் என்பது ஆகும்;
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகுமே.

இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
வழக்கு என்பது பேச்சு வழக்கு,
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே.

1. கடவுள் வாழ்த்து

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

1. கடவுள் வாழ்த்து

கணபதி 
(கலிவிருத்தம்)
வெண்துகில் உடுத்து வெளியெங்கும் வியாபித்து
வெண்ணிலா நிறத்துடன் ஆனந்த முகம்கொண்ட 
ஓங்கார வடிவத்தை விக்னமறத் தியானித்துப்
பாங்காக நூலமையப் பாதம் பணிவேனே.

அவையடக்கம்
(வெண்டுறை)
கற்றறிந்தோர் நூற்பல சற்றேனும் கற்றதில்
பெற்றசில செய்தி மகிழ்ச்சி வியப்பினை
மற்றவரும் கண்டு மகிழ்ந்து பயன்பெற
உற்றதே ’கவிதையில் யாப்பு’.

1.1. செய்யுளும் கவிதையும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம்.

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.

மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாகும் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் அதன்பொருள் மனமே.

கவிதையில் மனதைச் சொல்லும் போது
செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.

*** *** ***